தளர்ச்சி கண்டு அடிமைப்பட்டுள்ள தமிழகத்தை மீட்பதற்கான தி.மு.க.வின் பயணம் தொடரும்; மு.க.ஸ்டாலின் அறிக்கை

தளர்ச்சி கண்டு அடிமைப்பட்டுள்ள தமிழகத்தை மீட்பதற்கான தி.மு.க.வின் பயணம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2017-06-05 21:52 GMT

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கருணாநிதிக்கு விழா

தமிழக சட்டமன்றத்தில் 60 ஆண்டுகாலம் பணியாற்றி, 13 முறை தேர்தல் களத்தில் வென்ற கருணாநிதியின் சாதனை, இந்திய அரசியல் வரலாற்றில் எவரும் நிகழ்த்தாத மாபெரும் சாதனையாகும். அந்தச் சாதனையை, அவரை வெற்றிபெற வைத்த தமிழக மக்களுக்கு நினைவூட்டி, நன்றி தெரிவிக்கும் வகையிலும், இந்திய அளவில் அதனை எடுத்துக்காட்டிடும் வகையிலும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் இந்திய அளவிலான தலைவர்கள் பங்கேற்ற வெற்றி விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

உடல்நிலை காரணமாக கருணாநிதி இந்த கோலாகல விழாவில் பங்கேற்க முடியவில்லையே என்கிற மனபாரம் இருந்தாலும், என்றைக்கும் நமக்கு வழிகாட்டுபவர் அவர்தான் என்கிற அந்த உணர்வுடன்தான் தி.மு.க.வினருடன் நானும் பங்கேற்றேன். விழாவில் கலந்துகொண்ட தலைவர்களும் கருணாநிதி பங்கேற்க முடியாததைக் குறிப்பிட்டதோடு, தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே அவர் எப்படி வழிகாட்டியாக விளங்குகிறார் என்பதை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டி உரையாற்றினர்.

ராகுல்காந்தி

இந்திய தேசிய காங்கிரசின் துணைத்தலைவர் ராகுல்காந்தி விழாமேடையில் உரையாற்றியதுடன், கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து அன்பைப் பொழிந்தார். விழாவில் பங்கேற்பதற்கு முன்னதாக என்னுடைய இல்லத்திற்கும் வந்து சிறப்பு செய்தார்.

அவரைப் போலவே பீகார் முதல்–மந்திரி நிதீஷ்குமார், காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா, புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினுடைய பாராளுமன்றக்குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடைசி நேரத்தில் வர இயலாததால், அவர் சார்பில் பங்கேற்ற மஸ்ஜித் மேமன், ஐக்கிய ஜனதாதள பொதுச்செயலாளர் கேசி தியாகி என தேசிய அரசியலில் மையம் கொண்டிருக்கிற நேச சக்திகளின் கூட்டுறவாக அமைந்த இந்த வைர விழா நிகழ்வுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையேற்று சிறப்பித்தது மிகப் பொருத்தமாக அமைந்தது. முதன்மை செயலாளர் துரைமுருகன் வந்திருந்த அனைவரையும் வரவேற்று வரலாற்று பார்வையுடன் ஆற்றிய உரை சிறப்பிற்குரியது.

நன்றி

விழாவில் பங்கேற்ற தலைவர்கள் பலரும் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தனைத் தலைவர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேரில் வர இயலாத நிலையில் தொலைபேசி வாயிலாகவும், அறிக்கைகள் மூலமாகவும் வாழ்த்திய ஜனாதிபதி, இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தி.மு.க. செயல் தலைவர் என்றமுறையில் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

இந்திய நாட்டின் சிறப்பம்சமான பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும், ஜனநாயக நாட்டில் எதேச்சதிகாரம் எக்காரணம் கொண்டும் தலைதூக்கி விடாமல் தடுக்கவும், மாநில உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்தின் உன்னத நோக்கத்தை சீர்குலைக்கும் சக்திகளை எதிர்க்கவும், கருணாநிதி வழிகாட்டுதலுடன் தி.மு.க. என்றும் போல், வலிமையுடன் இமயமென உயர்ந்து நின்று தொண்டாற்றும் என்ற உறுதியை என் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்திய தலைவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் இதய சுத்தியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழகத்தை மீட்க...

தி.மு.க.வின் பெரும் பலம் தொண்டர்கள். அந்தத்தொண்டர்களுக்கு பெரும் பலம் கருணாநிதி தான். அப்படிப்பட்டத் தலைவரின் உடல்நிலையை உணர்ந்து, அவருடைய தொண்டர்கள் காட்டிய கட்டுப்பாடு மிக்க அன்புக்கும், தங்கள் பங்கேற்பினால் விழாவை வெற்றிகரமாக மாற்றியதற்கும் வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். தளர்ச்சி கண்டு அடிமைப்பட்டுள்ள தமிழகத்தை மீட்கவும், எதேச்சதிகார சக்திகளிடமிருந்து இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காக்கவும் தி.மு.க.வின் பயணம் உறுதியுடன் தொடரும்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்