‘லோக் ஆயுக்தா’ அமைக்க கோரிய வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் தொடர்ந்த வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
லோக் ஆயுக்தாமுன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான நிர்வாக சீர்திருத்த ஆணையம் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அதன்படி, 1968–ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘ஜன் லோக்பால்’ சட்ட முன்வடிவு 1969–ம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் இச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை.
45 ஆண்டுகளுக்கு பிறகு 2013–ம் ஆண்டு டிசம்பர் 18–ந் தேதி லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களுக்கு சேவை செய்யும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டப்படி, ஓராண்டுக்குள் அனைத்து மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் இல்லைஆனால், இதுவரை 20 மாநிலங்கள் மட்டும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாடு, ஜம்முகாஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.
தமிழகத்தில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரிப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில், ‘ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரானைட் முறைகேடு நடந்துள்ளது. இதில் அரசு உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பதால், தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது அவசியம்’ என்று கூறியுள்ளது.
பதில் அளிக்க வேண்டும்தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த உத்தரவிடுவதுடன், அதனை அமைப்பதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘மனுவுக்கு 4 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற ஜூலை 10–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.