அ.தி.மு.க.வை டி.டி.வி.தினகரன் வழிநடத்துவது பற்றி முதல்-அமைச்சர் தான் முடிவு செய்யவேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அ.தி.மு.க.வை டி.டி.வி.தினகரன் வழிநடத்துவது பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்யவேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Update: 2017-06-04 22:00 GMT
கோபி,

கோபி தாலுகா அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

கல்வித்துறையில் இந்தியாவிலேயே பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அறிவிக்கும் போதே, தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதிகளையும் வெளியிட்டது இந்த அரசுதான். மேலும் தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலமாக மாணவ, மாணவிகளுக்கு அறிவித்ததும் இந்த அரசு தான்.

புதிய கல்வி திட்டங்கள்

கல்வித்துறையில் மாற்றம் செய்வதற்காக புதிய உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது. இதில் கல்வியாளர்கள், அறிஞர்கள் இடம் பெற உள்ளனர். வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் கல்வித்துறை மானியத்தின் போது 41 புதிய கல்வி திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

ஆசிரியர் கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. எங்கள் துறையை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. புண்படுத்தாதீர்கள். இந்த அரசு 5 ஆண்டுகள் அல்ல 50 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து நீடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

டி.டி.வி.தினகரன்

முன்னதாக அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆசிரியர் கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்திருப்பதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் அதிகமாக சேர்ந்துள்ளார்கள் என்று கூறினார்.

டி.டி.வி.தினகரன் மீண்டும் தான் கட்சியை வழிநடத்துவேன் என்று கூறியது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, ‘ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மாறுபட்ட கருத்துகளை கூறக்கூடாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும்’ என செங்கோட்டையன் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்