மதுக்கடைக்கு எதிராக போராடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தலைமைச் செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2017-06-03 22:15 GMT
மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

டாஸ்மாக் கடைகளால் ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி, வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி, கோவை, வேலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெண்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் இடமாற்றம் செய்யப்பட்ட டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி, மதுபாட்டில்களை சாலையில் உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.

பொதுசொத்துகள் சேதம்

இதனால் அரசின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், பொது சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே பொதுசொத்துக்களை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் பெண்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் 3-ந்தேதி அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே எனது மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நோட்டீசு

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் இந்த மனு குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., டாஸ்மாக் தலைவர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜூலை மாதம் 3-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்