லட்சியங்களை நிறைவேற்ற உழைப்பதே கருணாநிதிக்கு நாம் தரும் பிறந்தநாள் பரிசு தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கருணாநிதியின் லட்சியங்களை நிறைவேற்றுவதே நாம் அவருக்கு தரும் பிறந்தநாள் பரிசாக அமையும் என்று தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-06-03 22:30 GMT
சென்னை,

கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் மற்றும் சட்டசபை வைர விழாவையொட்டி தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஓய்வு

ஓய்வறியா சூரியனாக 80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் மற்றும் அவரது சட்டமன்றப் பணிகளுக்கான வைர விழா காண்கின்ற இந்த நன்னாளில் நாம் மட்டுமின்றி, இந்திய நாடே அவரை வாழ்த்துகிறது.

உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உள்ளத்தால் வாழ்த்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்தநாளில், தி.மு.க. தொண்டர்களை நேரில் சந்தித்து அவர்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், அன்பான பரிசுகளையும் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைபவர் தலைவர்.

தமிழினத்தின் உரிமைக்கும், மேன்மைக்கும் ஓயாது பணியாற்றிய காரணத்தால் தற்போது அவரது உடல்நிலை ஒத்துழைக்க மறுத்து, ஓய்வு தேவைப்படுகிறது.

பிறந்தநாள் பரிசு

கருணாநிதியின் சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஓய்வு கிடையாது. அவர்தான் எப்போதும் போல நம்மை வழி நடத்துகிறார். இத்தனை காலம் நமக்காக அவர் உழைத்த நிலையில், அவரது லட்சியங்கள் நிறைவேற நாம் அவருக்காக உழைப்பதே, கருணாநிதிக்கு வழங்கக்கூடிய பிறந்தநாள் பரிசாக அமையும்.

விரைந்து உடல்நலன் தேறி, தமிழகத்தைக் கவர்ந்த தனது காந்தக் குரலால், ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...’ என்று அழைக்கும் நாளினை எதிர்பார்த்திருக்கிறோம். அந்தக் குரல் விரைந்து ஒலிக்க, தற்போது அவருக்கு ஓய்வு தந்து, அவரது பணிகளை செய்து முடிப்போம். அந்த வெற்றி தரும் ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும், கருணாநிதியின் குரல் கேட்போம். நூறாண்டு கடந்தும் அவர் வாழ்வாங்கு வாழ வணங்கி வாழ்த்திடுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்