‘சுவாதி கொலை வழக்கு’ படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை டைரக்டர் ரமேஷ் செல்வன் பேட்டி

‘சுவாதி கொலை வழக்கு’ படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை என்றும், அந்த படத்தை சுவாதி-ராம்குமார் குடும்பத்தினருக்கு திரையிட்டு காட்ட தயார் என்றும் டைரக்டர் ரமேஷ் செல்வன் கூறினார்.

Update: 2017-06-01 22:00 GMT
சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், சினிமா படமாக தயாராகி உள்ளது. இந்த படத்துக்கு ‘சுவாதி கொலை வழக்கு’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

இந்தநிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் படத்தை தடை செய்யக்கோரி போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்து உள்ளார். சுவாதியை களங்கப்படுத்தும் காட்சிகள் படத்தில் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

தவறாக சித்தரிக்கவில்லை

இதற்கு பதில் அளித்து ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் டைரக்டர் ரமேஷ் செல்வன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சுவாதி கொலை சம்பவம் பொது இடத்தில் நடந்தது. பலரையும் அது உலுக்குவதாக அமைந்தது. அந்த கொலை பின்னணியில் இருக்கும் உண்மை சம்பவங்களை வெளிக்கொண்டு வருவதற்காக இந்த படத்தை தயாரித்தோம்.

இதில் சுவாதியையோ, ராம்குமாரையோ, போலீசாரையோ புண்படுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை. இதுபோன்ற ஒரு சம்பவம் இனிமேல் நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவே இப்படத்தை சமூக அக்கறையுடன் இயக்கினேன். ஏற்கனவே ‘உளவுத்துறை’, ‘தலைவன்’, ‘ஜனனம்’ உள்ளிட்ட நல்ல படங்களை இயக்கி இருக்கிறேன். அதுபோல் தான் இந்த படமும் இருக்கும். தவறாக யாரையும் சித்தரிக்கவில்லை.

திரையிட்டு காட்டுவேன்

இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று சுவாதி குடும்பத்தினரை கேட்டுக்கொள்கிறேன். சுவாதி குடும்பத்தாருக்கும், ராம்குமார் குடும்பத்தாருக்கும் படத்தை திரையிட்டு காட்டுவேன். அவர்கள் ஏதேனும் திருத்தம் சொன்னால் அதை ஏற்க தயாராக இருக்கிறேன். சர்ச்சை காட்சிகளையும் நீக்குவேன்.

இந்த படத்தில் வரும் லாபத்தில் இரு குடும்பத்தினருக்கும் பங்கு கொடுக்கவும் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்