சென்னையில் 3 இடங்களில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா 8–ந்தேதி நடக்கிறது

பாஸ்போர்ட் கேட்டு காத்திருப்போர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சென்னையில் 3 இடங்களில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா வருகிற 8–ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

Update: 2017-04-03 21:15 GMT

சென்னை,

பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பாஸ்போர்ட் மேளா

பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றும், அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு உதவும் வகையிலும், சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வருகிற 8–ந்தேதி (சனிக்கிழமை) சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெறுகிறது.

இதனையொட்டி சென்னை சாலிகிராமம், தாம்பரம் மற்றும் அமைந்தகரை (நெல்சன் மாணிக்கம் சாலை) ஆகிய 3 இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் வருகிற 8–ந்தேதி மற்ற வார நாட்களை போல் இயங்கும். சுமார் 2 ஆயிரத்து 500 விண்ணப்பதாரர்கள் இந்த சிறப்பு மேளாவின் மூலம் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவணங்கள்

பாஸ்போர்ட் மேளாவில் பங்கேற்க, விண்ணப்பதாரர்கள் அனைவரும், பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.passportindia.gov.in மூலம் ‘ஆன்லைனில்’ பதிவு செய்து, விண்ணப்ப பதிவு எண்ணை (ஏ.ஆர்.என்.) பெற்றுக் கொள்ள வேண்டும். ‘ஆன்லைன்’ மூலமாகவே விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்தி சந்திப்பு முன்பதிவு நேரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பாஸ்போர்ட் மேளா நடைபெறும் நாளன்று அனைத்து ஆவணங்களின் அசலுடன், சுய சான்றளிக்கப்பட்ட ஒரு நகலும் கொண்டு வர வேண்டும். இந்த மேளாவில் புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும். தட்கல் (உடனடி பாஸ்போர்ட்) விண்ணப்பங்கள், காவல்துறை தடையின்மை சான்றிதழ் (பி.சி.சி.) போன்ற விண்ணப்பங்கள் வழங்க முடியாது.

முன்பதிவு

சிறப்பு பாஸ்போர்ட் மேளாவிற்கான சந்திப்பு முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.30 மணிக்கு திறக்கப்படும். மேளா நாளன்று, குறித்த நேரத்திற்கான முன்பதிவு நேரம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்