‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலிக்கும் முதல்-அமைச்சரிடம் மத்திய மந்திரி ஜவடேகர்
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்தார்.
சென்னை,
தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான (எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.) மாணவர்கள் சேர்க்கை ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் மூலம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. நுழைவுத்தேர்வுக்காக விண்ணப்பிப்பது கடந்த 1-ந் தேதியுடன் முடிவடைந்தது.
ஆனால் இந்த நுழைவுத்தேர்வுக்கு தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் இரு சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன.
எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
மேலும், சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று மதியம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
அப்போது, பிரகாஷ் ஜவடேகருக்கு எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
விலக்கு அளிக்க கோரிக்கை
சுமார் 30 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ‘நீட்’ தேர்வு வந்தால் தமிழகத்தில் ஏழை-எளிய கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்ற நிலையையும் விரிவாக விளக்கினார்.
டெல்லியில் சமீபத்தில் பிரதமரை தான் சந்தித்து பேசிய போது, இந்த பிரச்சினை குறித்து அவரிடம் வலியுறுத்தி கூறியதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மத்திய அரசு பரிசீலிக்கும்
அவர் கூறிய விவரங்களை கேட்டு அறிந்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “தமிழக அரசின் இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்” என்று உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பின் போது சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, பிரகாஷ் ஜவடேகர் மும்பையில் இருந்து சென்னை வந்த போது விமானநிலையத்தில் நிருபர்கள் அவரிடம், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருப்பது பற்றி கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், இதுபற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.