கோடையில் குடிநீர் பஞ்சத்தை தவிர்க்க போர்க்கால நடவடிக்கை தேவை

தமிழக அணைகள், ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-03-01 19:49 GMT

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை 3 மாதங்கள் பெய்வது வழக்கம். இந்த மழையால்தான் தமிழகத்தின் குடிநீர் தேவையில் 70 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டுக்கான பருவமழை எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள முக்கியமான 15 அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் எதிர்பார்த்த அளவு நீர்மட்டம் உயரவில்லை.

அதேபோல சென்னைக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம் போன்ற ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழை பெய்யாததால் எதிர்பார்த்த அளவு நீர் மட்டம் உயரவில்லை. அடுத்த ஒரு சில நாட்களில் தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால், அங்குள்ள அணைகளின் நீர் மட்டம் சற்று உயர வாய்ப்பு உள்ளது.

தமிழக அணைகள்

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள பெரியார் அணையில் 46.33 அடியும், பாபநாசம் அணையில் 43.59 அடியும், சோலையாறு அணையில் 48.77 அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் அங்குள்ள பேச்சிப்பாறை 14.63 அடியும், பெருஞ்சாணி அணையில் 33.47 அடியும், மணிமுத்தாறு அணையில் 35.97 அடி தண்ணீரும்தான் இருக்கிறது.

ஒரு சில அணைகள் இருக்கும் நீர்பிடிப்பு பகுதிகளில் வெளியில் இருந்து வரும் தண்ணீரால் ஓரளவு தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது. குறிப்பாக மேட்டூர் அணைக்கு 46 கன அடி, பவானிசாகர் 12 கன அடி, அமராவதி 10 கன அடி, வைகை 40 கன அடி, பாபநாசம் 122 கன அடி, மணிமுத்தாறு 91 கன அடி, பேச்சிப்பாறை 166 கன அடி, கிருஷ்ணகிரி 31 கன அடி, சோலையாறு 101 கன அடி, பரம்பிக்குளம் 107 கன அடி, ஆழியாறு 277 கனஅடி வீதம் மழைநீர் வந்து கொண்டு இருக்கிறது.

இருந்தாலும் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பெரியார், வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சோலையாறு, சாத்தனூர், பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய எல்லா அணைகளிலுமே நீர் மட்டம் 50 அடிக்கும் கீழேதான் உள்ளது. இந்த நீரின் மூலம் அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு முழுமையாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இயலாது.

சென்னை ஏரிகளின் நிலை

அதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரிகள் உள்ளபகுதியிலும் குறைந்த அளவே மழை பெய்து இருப்பதால் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.

இந்த 4 ஏரிகளிலும் தற்போது 1.709 டி.எம்.சி. (1,709 மில்லியன் கன அடி) தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இருந்தாலும் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கிருஷ்ணா நதி நீர் பெறப்பட்டு வருகிறது.

அதுவும் சமீபத்தில் வந்த வார்தா புயல் காரணமாக கிருஷ்ணா நதி நீரையும் ஆந்திர மாநில அரசு நிறுத்தியது. இதனை மீண்டும் திறந்துவிடக்கோரி தமிழக அதிகாரிகள், ஆந்திர மாநில அரசுக்கு கடிதம் எழுதினர். அதன்படி கிருஷ்ணா நதி குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் மூலம்தான் சென்னையின் குடிநீர் தேவை ஓரளவு சமாளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் ஓரளவு தண்ணீர் இருப்பு இருப்பதால் ஏப்ரல் மாதம் முடிய பிரச்சினை வராது. அதற்கு பிறகுதான் ஆந்திராவையும், கோடை மழையையும் நம்பி இருக்க வேண்டி இருக்கிறது.

கர்நாடக அணைகள்

அதேநேரம் நேற்றைய நிலவரப்படி, கர்நாடக மாநிலத்தில் 124 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையில் 38.04 அடியும், 65 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 19.81 அடியும் தண்ணீர் உள்ளது. அதேபோல் 129 அடி கொள்ளளவு கொண்ட ஹாரங்கி அணையில் 39.32 அடி மற்றும் 117 அடி கொள்ளளவு கொண்ட ஹேமாவதி அணையில் 35.66 அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த அணைகளை பொறுத்தவரையில் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 6 ஆயிரத்து 100 கன அடியும், கபினி அணைக்கு 43 கன அடியும், ஹாரங்கி அணைக்கு 5 கன அடியும், ஹேமாவதி அணைக்கு 1 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் 68 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் சுமார் 20 டி.எம்.சி.யும், 78 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட சோமசீலா அணையில் 30 டி.எம்.சி. தண்ணீரும் இருப்பு உள்ளது. இதில் கண்டலேறு அணையில் 8 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தால்தான் பூண்டிக்கு தண்ணீர் திறந்துவிட முடியும். அதேபோல் சோமசீலாவில் 22 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தால்தான் கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்துவிட முடியும். இரண்டு மாநிலத்தவருமே போதிய மழையை எதிர்பார்த்துத்தான் உள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டம்

பொதுவாக சென்னை மாநகரின் நீர்த்தேக்கங்கள் பெரும்பாலும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையையே சார்ந்திருக்கின்றன. இந்த பருவமழை மூலமே சென்னையில் உள்ள நீர்தேக்கங்களில் அதிகமாக நீர் சேகரிக்கப்படுகிறது.

இப்படி சேகரிக்கப்படும் மழை நீரின் காரணமாக சென்னையின் நிலத்தடிநீர் மட்டம் உயருவதுடன், தண்ணீர் பற்றாக்குறையையும் ஓரளவு போக்க முடிகிறது. ஆனால் பருவமழை பொய்த்து போனதால் எதிர்பார்த்த அளவு நிலத்தடி நீர் மட்டமும் சென்னையில் உயரவில்லை.

போர்க்கால நடவடிக்கை

சென்னை மாநகரில் பெய்யும் சராசரி மழையளவில் 1 சதுர அடியில் 1 ஆண்டுக்கு கிடைக்கப்பெறும் நீரின் அளவு 113 லிட்டர். இதேபோல் 2 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவுள்ள வீட்டுமனையில் கிடைக்கும் மழை நீரின் அளவு 2 லட்சத்து 71 ஆயிரத்து 200 லிட்டர்.

இதில் பூமிக்குள் செலுத்தக்கூடிய மழைநீரின் அளவு 60 சதவீதம். இந்த அளவில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 720 லிட்டர் மழைநீரை சேகரிப்பதன் மூலம், திரும்ப பூமிக்குள் செலுத்தி ஈடுகட்டுவதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை எளிதில் தவிர்க்க முடியும்.

இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதையும் தடுக்கலாம். ஆனால் நடப்பாண்டு போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாததால், கணிசமான அளவு நிலத்தடி நீரை அதிகரிக்க முடியவில்லை.

பருவ மழை பொய்த்ததால், ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையை தவிர்க்க தமிழக அரசும், பொதுப்பணித்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேற்கண்ட தகவல்களை சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

--–

அணைகளின் கடந்த மற்றும் நடப்பாண்டு நீர்மட்டம் விவரம்

--–

எண் அணையின் கொள்ளளவு நேற்றைய கடந்த ஆண்டு

பெயர் அடியில் நீர்மட்டம் நீர் மட்டம்

 

--–

1. மேட்டூர் 120 36.58 61.01

2. பவானிசாகர் 105 32 61.92

3. அமராவதி 90 27.43 32.30

4. பெரியார் 152 46.33 115.20

5. வைகை 71 21.64 38.75

6. பாபநாசம் 143 43.59 103.15

7. மணிமுத்தாறு 118 35.97 101.41

8. பேச்சிப்பாறை 48 14.63 27.95

9. பெருஞ்சாணி 77 33.47 64.05

10. கிருஷ்ணகிரி 52 15.85 49.65

11. சாத்தனூர் 119 36.27 112.25

12. சோலையாறு 160 48.77 29.73

13. பரம்பிக்குளம் 72 21.95 33.97

14. ஆழியாறு 120 36.58 77.80

15. திருமூர்த்தி 60 18.29 47.91

--–

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு

--–

ஏரிகள் மொத்த நேற்றைய கடந்த ஆண்டு

கொள்ளளவு நிலவரம் நிலவரம்

--–

பூண்டி 3,231 799 2,049

சோழவரம் 881 28 376

செங்குன்றம் 3,300 720 2,711

செம்பரம்பாக்கம் 3,645 162 2,855

--–

மொத்தம் 11,057 1,709 7,991

--–

* தண்ணீர் மில்லியன் கன அடியில்

மேலும் செய்திகள்