டாஸ்மாக் கடையின் பெயர் பலகை ‘ஸ்டிக்கர்’ ஒட்டி மறைப்பு; டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது

சென்னையில் நெடுஞ்சாலையில் உள்ள ‘டாஸ்மாக்’ கடை பெயர் பலகையில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டி மறைக்கும் நூதன போராட்டம் பா.ம.க. சார்பில் நேற்று நடந்தது. இதில் ஈடுபட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-03-01 20:45 GMT

சென்னை,

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை வருகிற 31–ந்தேதிக்குள் மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மேலும் அந்த கடைகளின் பெயர் பலகைகளை உடனே அகற்ற வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல டாஸ்மாக் கடைகளின் பெயர் பலகை இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. அந்த கடைகளின் பெயர் பலகையை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கும் நூதன போராட்டம் நடத்தப்போவதாக பா.ம.க. அறிவித்து இருந்தது.

அதன்படி சென்னை அசோக்நகர் 100 அடி சாலையில் உள்ள ஒரு ‘டாஸ்மாக்’ கடை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட வேண்டிய பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. இந்த கடையின் விளம்பர பலகைக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம் பா.ம.க. சார்பில் நேற்று நடத்தப்பட்டது.

அன்புமணி ராமதாஸ் கைது

பா.ம.க. இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ‘இது சட்டவிரோதமான டாஸ்மாக் கடை’ என்று குறிப்பிடும் ‘ஸ்டிக்கர்’களை கடையின் விளம்பர பெயர் பலகையில் ஒட்டினார்.

அவருடன் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோரும் ‘ஸ்டிக்கர்’களை ஒட்டினர். அதனைத்தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பூட்டு போடும் போராட்டம்....

தேசிய–மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளை மார்ச் 31–ந்தேதிக்குள் அகற்றவேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 15–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த கடைகளின் பெயர் பலகைகளை உடனடியாக அகற்றவேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை சந்தித்து வக்கீல் பாலு வலியுறுத்தி உள்ளார். ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பணியை நாங்களே தொடங்கிவிட்டோம். தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கு நிலைமையை பார்த்து சந்தி சிரிக்கிறது. மதுக்கடைகளுக்கு போலீசாரே பாதுகாப்பு வழங்குகின்றனர். இதைவிட அவமானம், கேவலம் இருக்கமுடியாது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தேசிய–மாநில நெடுஞ்சாலைகளில் 2 ஆயிரத்து 700 ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் ஏப்ரல் 1–ந்தேதி அந்த கடைகளுக்கு நாங்கள் பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம். வெறும் 500 கடைகளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்ற தமிழக அரசு நினைக்கிறது. அது நடக்காது. இந்த ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம் இந்த மாதம் முழுவதும் நடைபெறும்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்