‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால், தமிழகத்தில் உள்ள 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Update: 2017-02-28 23:37 GMT

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

‘நீட்’ தேர்வுக்காக மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 1–ந்தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் பங்குபெற வேண்டும் என்றால் அதற்கு விண்ணப்பிப்பதற்கு நாளை (இன்று) தான் கடைசி நாளாகும்.

இச்சூழலில் தமிழக முதல்–அமைச்சர் பிரதமர் மோடியை சந்தித்து, இதுகுறித்து கோரிக்கை விடுக்கப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. சமநிலைத் தன்மையில் இல்லாத தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்படுகிற நுழைவுத் தேர்வில் இருந்து காப்பாற்றப்படுவதற்கு 2 வழிமுறைகள் தான் உள்ளன.

எச்சரிக்கை

ஒன்று, தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்குவது; மற்றொன்று, கடந்த ஆண்டு நிறைவேற்றியதைப் போல இன்னும் 2 ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக அவசரச்சட்டம் இயற்ற வேண்டும். இந்த அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை எனில் தமிழகத்தில் உள்ள 8 லட்சம் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என மத்திய–மாநில அரசுகளை எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்.

மத்திய அரசு நிறைவேற்றுகிற திட்டங்களை எல்லாம் மாநில அரசு கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழகத்தில் கல்வித்தரம் கடந்த பல ஆண்டுகளாக சீரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது குறித்து யாரும் கவலைப்படாமல் இருக்கமுடியாது.

போர்க்கால நடவடிக்கை

இந்தியாவிலேயே கல்வியை வணிக மயமாக்கியதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வது மிகுந்த வெட்கப்பட வேண்டிய வி‌ஷயமாகும். கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதியவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 41.9 சதவீதம் பேர் தான் தேர்வாகியிருக்கிறார்கள். ஆனால் கேரளாவில் 79.77 சதவீதம், கர்நாடகத்தில் 71.8 சதவீதம் என தேர்வாகி இருக்கிறார்கள். இதைப் பார்க்கின்ற போது தமிழகத்தில் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக தீவிர முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.

மத்திய பாட திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத்திட்டத்தை தரமுள்ளதாக மாற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில் தமிழகம் பின்தங்கிய நிலைக்குச் சென்று தாழ்ந்த தமிழகமாக மாற வேண்டிய அவலநிலை ஏற்படும் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்