விவசாயிகளின் மரணங்களை அரசு கண்டும், காணாமல் இருப்பது வேதனைக்குரியது மு.க.ஸ்டாலின் பேட்டி
விவசாயிகளின் மரணங்களை அரசு கண்டும், காணாமல் இருப்பது வேதனைக்குரியது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
விவசாயிகளின் மரணங்களை அரசு கண்டும், காணாமல் இருப்பது வேதனைக்குரியது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின், தன்னுடைய சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.48.55 லட்சம் ஒதுக்கீடு செய்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சென்னை கொளத்தூரில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் திட்டப்பணியை நேற்று தொடங்கி வைத்தார்.
கோரிக்கை
இதையடுத்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சென்னை கொளத்தூரில் வரதராஜன் தெரு, வெற்றி நகர் பிரிவு, குமரன் நகர் 3–வது தெரு வழியாக, தணிகாசலம் நகர் 80 அடி சாலை கால்வாய்த்துறை வரை மழை நீர் வடிகால் கட்ட கூடிய பணியை தொடங்கி வைத்திருக்கிறேன். இந்த பணியை 3 மாத காலத்திற்குள் நிறைவு செய்து முடிக்க திட்டமிட்டு இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்னிடத்தில் தெரிவித்தனர். பணிகளை விரைவுபடுத்தி, 2 மாத காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டுமென பொதுமக்களின் சார்பில் நான் கோரிக்கை வைத்துள்ளேன். அதனை ஏற்றுக்கொண்டு பணியை விரைவில் முடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வார்தா புயலில் சாய்ந்து விழுந்த மரங்களை முக்கியமான சாலைகளை பொறுத்தவரையில் ஓரளவு அப்புறப்படுத்தி இருந்தாலும், பல உள்சாலைகள், சிறிய சாலைகள், சந்து பொந்துகளில் விழுந்த மரங்களை அரசும், மாநகராட்சி நிர்வாகமும் இன்னமும் அப்புறப்படுத்தாமல் இருப்பதால், போக்குவரத்து பாதிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவற்றை அப்புறப்படுத்தும் பணியினை வேகப்படுத்திட வேண்டும் என்று நான் அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்த கடமைபட்டுள்ளேன்.
விளையாட்டு திடல்களில்..
மேலும், அப்புறப்படுத்தப்பட்ட மரங்களை எல்லாம் மாநகராட்சி விளையாட்டு திடல்களில் போட்டு வைத்துள்ளனர். அதனால் பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் விளையாட்டு திடல்களை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள் என்பது ஒரு பெரிய குறையாக இருந்து கொண்டிருக்கிறது.
இதைவிட கொடுமை என்னவென்றால், மரங்களை ஆங்காங்கு குவித்து வைத்திருப்பதால் அங்கெல்லாம் கொசுக்களின் தொல்லை அதிகமாகி தொற்று நோய்கள் பரவும் சூழல் உருவாகியுள்ளது. ஆகவே, அரசு இதில் அலட்சியம் காட்டாமல் மரங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த உடனடியாக மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, பணிகளை விரைவு படுத்தவேண்டும் என்று நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேதனை
இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:
விவசாயிகள் மரணம் தொடர்கதையாகி வருகிறதே?
பதில்: எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இதுகுறித்து நான் தொடர்ந்து அரசை வற்புறுத்தி வருகிறேன். ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்திலும் இதனை எடுத்துச்சொல்லி இருக்கிறோம். விவசாயிகளை அழைத்து அவர்களுடைய பிரச்சினைகளை, கோரிக்கைகளை கேட்டறிந்து, புரிந்து உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தினை தமிழகத்தில் கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வந்திருக்கிறோம். முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரடியாகவே சந்தித்து, விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தினை கூட்டி எடுக்கப்பட்ட தீர்மானங்களை அவரிடத்தில் தந்திருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, விவசாயிகளின் இன்றைய நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், அதற்காக சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, ஒரு தீர்மானமாக நிறைவேற்றிட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த அரசை பொறுத்தவரையில் இதையெல்லாம் கண்டும், காணாமல் இருப்பது போல செயல்படுவது உண்மையிலேயே வேதனைக்குரியது, வெட்கப்படத்தக்கதாக இருக்கிறது.
மத்திய அரசு மவுனம் ஏன்?
கேள்வி: தமிழகத்தில் நடந்த வருமான வரி சோதனைகள் குறித்து மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறதே?
பதில்: தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு வந்த என்னை இத்தனை ஆர்வத்துடன் நீங்கள் வந்து சந்திப்பது என்பது உண்மையிலேயே எனக்குள்ள மகிழ்ச்சி தான். ஆனால் முதல்–அமைச்சராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, அவரிடத்தில் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடத்தில் கேட்கிறீர்கள் என்று தொடர்ந்து நான் சொல்லி வருகிறேன்.
விளக்கம் அளிக்கவேண்டும்
கேள்வி:
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து பலவித சந்தேகங்கள் நிலவி வருகிறதே?
பதில்: உயர் நீதிமன்றமே இதுகுறித்து சந்தேகத்தை தெரிவித்து இருக்கிறது. இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்று சொன்னால், முதல்–அமைச்சராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் தான் இதற்கெல்லாம் ஒரு விளக்கத்தை, பதிலை சொல்ல வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.