2016-ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட புகையிலையை சட்டப்படி அழிக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு

பல ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட ‘ஹான்ஸ்’ புகையிலை பாக்கெட்டுகளை சட்டப்படி அழிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-05-11 22:53 GMT

சென்னை,

சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "எங்கள் நிறுவனத்தில் இருந்து 'ஹான்ஸ்' புகையிலை பாக்கெட்டுகளை தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்ட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், "ஹான்சில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் நிக்கோடின் 1.8 சதவீதம் உள்ளது. அதனால், இந்த பொருளை அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் ரத்து செய்தாலும், அந்த ரத்து செய்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது" என்று வாதிட்டார்.

மேலும், "மனுதாரரிடம் இருந்து 'ஹான்ஸ்' புகையிலை பாக்கெட்டுகளை 2016-ம் ஆண்டே அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதால், அது கெட்டு போயிருக்கும். எனவே, திருப்பி ஒப்படைக்க முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

அடிப்படை உரிமை

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை தடை செய்வதற்கு அரசு அதிகாரம் இருந்தாலும் தடை விதிக்கும் முன்பு உரிய மதிப்பீடு மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், தொழில் அல்லது வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையாக இருந்தாலும், அந்த உரிமையானது அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது ஆகும்.

கடமை

குடிமக்களின் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும். எந்தவொரு புகையிலை தயாரிப்பு பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டால், அரசு தடை விதிப்பது நியாயமானதுதான். எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. பறிமுதல் செய்யப்பட்ட 'ஹான்ஸ்' புகையிலையை சட்டப்படி அழிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்