2,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சிவகாசியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-07-25 19:01 GMT

சிவகாசி, 

சிவகாசியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் சோதனை

சிவகாசி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள் பாண்டியராஜ், முத்துப்பாண்டி, சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை ஜவுளி கடை வீதியில் உள்ள ஒரு குடோனில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமார் 500 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அதன் உரிமையாளர் ரவீந்திரனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

இதனைத்தொடர்ந்து சிவகாசி பி.எஸ்.எஸ்.ஏ. ஆறுமுகம் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த குடோனில் 1,500 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இங்கிருந்து தான் சிவகாசி முழுக்க பிளாஸ்டிக் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர். பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் அதன் உரிமையாளர் சந்திரசேகருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். 2 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்