ஒரே நாளில் 200 செல்வமகள் சேமிப்பு கணக்குகள் தொடக்கம்
வேலூர் தபால் கோட்டத்தில் ஒரே நாளில் 200 செல்வமகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டது.
இந்திய அஞ்சல்துறை சார்பில் வேலூர் தபால் கோட்டத்தில் இந்த மாதம் முழுவதும் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு சிறப்பு செல்வமகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கும் திருவிழா நடந்து வருகிறது.
இதன் முதல்நாளான நேற்று வேலூர் தபால் கோட்டத்தில் உள்ள 152 தபால் நிலையங்களிலும் 200-க்கும் மேற்பட்ட செல்வமகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டன.
புதிதாக செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கிய பெண் குழந்தைகளுக்கு அதற்கான புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நடந்தது. வேலூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் ராஜகோபாலன் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு கணக்கு புத்தகம் வழங்கினார்.
இதில், தபால்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.