எருது விடும் விழாவில் 200 காளைகள் சீறிப்பாய்ந்தன மாடு முட்டியதில் முதியவர் பலி
வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை கிராமத்தில் நடந்த எருதுவிடும் விழாவில் 200 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது மாடு முட்டியதில் முதியவர் பலியானார்.
எருதுவிடும் விழா
வாணியம்பாடி அருகே உள்ள கொத்தகோட்டை கிராமத்தில் மயிலார் திருவிழாவை முன்னிட்டு 68-ஆம் ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெ.மேனகா ஜெகதீசன், ஒன்றியகுழு உறுப்பினர் காயத்ரி பிரபாகரன், ஊர் கவுண்டர் எம்.கணபதி, நாட்டாண்மை எம்.சங்கர், தர்மகத்தா எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் ஆர்.பழனி ஆகியோர் தலைமை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி. சத்யவாணி பழனி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் வாணியம்பாடி ஜி.செந்தில்குமார், ஜோலார்பேட்டை க.தேவராஜி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முதியவர் பலி
விழாவில் திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, ராணிபேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்று ஓடின. அப்போது மாடுமுட்டியதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். படுகாயமடைந்த அதே கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் (வயது 62) என்பவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.1 லட்சம் பரிசு
நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அதிவேகமாக ஓடி கடந்து முதலிடம் பிடித்த வெள்ளகுட்டை கிராமத்தை சேர்ந்த காளை உரிமையாளர் முருகன் என்பவருக்கு ரூ.1 லட்சத்து 1000, இரண்டாம் பரிசாக எக்லாஸ்புரம் கிராமத்தை சேர்ந்த காளையின் உரிமையாளர் உதயம் என்பவருக்கு ரூ.71 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.51 ஆயிரம் என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.
விழா நடைபெற்ற இடத்தில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தாசில்தார் சம்பத் தலைமையில் வருவாய் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.