வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை.
திண்டுக்கல்லை அடுத்த பழைய முத்தனம்பட்டியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 28). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதுதொடர்பாக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராமராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட ராமராஜூவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.