20 ஆயிரம் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல்

மதுரையில் இருந்து கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-12-17 16:49 GMT

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலித்தீன் பைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதை அதிகாரிகள் அவ்வப்போது பறிமுதல் செய்து வருகின்றனர். அதேநேரம் அவை வெளியூர்களில் இருந்து கடத்தி வரப்படுவதால் அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. எனினும் லாரி புக்கிங், பார்சல் அலுவலகங்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் இருந்து லாரி மூலம் பிளாஸ்டிக் டம்ளர்கள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் மாநகர நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், சுகாதார பணியாளர்கள் திண்டுக்கல்லில் உள்ள லாரி புக்கிங், பார்சல் அலுவலகங்களை கண்காணித்தனர். இதில் தாலுகா அலுவலக சாலையில் உள்ள ஒரு லாரி புக்கிங் அலுவலகத்துக்கு லாரி மூலம் 3 பெரிய அட்டை பெட்டிகள் கொண்டு வரப்பட்டன.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவற்றை சோதனையிட்டனர். அதில் தடை செய்யப்பட்ட 20 ஆயிரம் பிளாஸ்டிக் டம்ளர்கள் இருந்தன. இதையடுத்து பிளாஸ்டிக் டம்ளர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, லாரி புக்கிங் அலுவலக உரிமையாளரை கடுமையாக எச்சரித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்களை ஆர்டர் கொடுத்தவர், விற்பனை செய்தவர் குறித்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்