பெரம்பலூரில் 20 ஆயிரம் நூல்கள் தேக்கம்

போதிய இட வசதி இல்லாததால் பெரம்பலூரில் 20 ஆயிரம் நூல்கள் தேக்கம் அடைந்துள்ளது.

Update: 2022-10-26 18:12 GMT

பெரம்பலூரை சேர்ந்த சமூகநீதி படைப்பாளர்கள் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தாகீர் பாட்சா கூறுகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நூலகங்களில் போதிய இடவசதி இல்லை. குறிப்பாக, வேப்பந்தட்டை நூலகத்தில் 50 ஆயிரம் நூல்கள், இணைய வசதியுடன் கூடிய 6 கணினிகள், நகல் எடுக்க ஜெராக்ஸ் எந்திரம், பிரிண்டர் ஆகியவை உள்ளன. வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இங்கு இவ்வளவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், போதிய இடவசதி இல்லை. இதனால், சுமார் 20 ஆயிரம் நூல்கள் வகைப்பிரித்து அடுக்கி வைக்கப்படாமல் கட்டுகளாகவே உள்ளன. இதனால், புதிய நூல்களைத் தேடும் வாசகர்களாலும், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களாலும் புதிய நூல்களை வாசிக்க முடியாத நிலை உள்ளது.

மேலும், வாசகர்கள் அமர்ந்து வாசிக்கவும் இடப் பற்றாக்குறை உள்ளதால், தற்போது இந்த நூலகத்துக்கு வாசகர்கள் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது. மேலும், மழைக் காலத்தில் நூலகக் கட்டிடத்தில் நீர்க்கசிந்து, நூல்கள் சேதமடைந்து வருகின்றன.

இந்த நூலகம் மட்டுமின்றி எசனை, லாடபுரம், வேப்பூர், குன்னம், அரும்பாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள கிளை, ஊர்ப்புற நூலகங்களின் நிலையும் மோசமாக உள்ளது. எனவே, நூலகங்களை விரிவுபடுத்தி, புதிய நூல்களை வகைப்படுத்தி அடுக்கி வைக்கவும், வாசகர்கள் அமர்ந்து வாசிக்கவும் தேவையான நடவடிக்கைகளை நூலகத் துறை உடனடியாக எடுக்க வேண்டும். மிகவும் சேதமடைந்த பழைய நூல்களை ஆய்வு செய்து, அவற்றை கழிக்க மாவட்ட நூலகர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்தப் பணியை விரைவுபடுத்தினாலே ஓரளவுக்கு புதிய நூல்களுக்கான இடப் பற்றாக்குறையை சரி செய்யலாம்.

நூலகங்களை விரிவுபடுத்தவும், கூடுதல் கட்டிடங்களைக் கட்டவும் சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பெறுவதற்கு நூலகத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அனைத்துத் தரப்பு மக்களுக்குமான நூல்களை மட்டும் கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்