20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மீண்டும் தண்ணீரில் மூழ்கின

ெகாள்ளிடம் அருகே எடமணலில் பொறைவாய்க்கால் கரை உடைந்ததால் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மீண்டும் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-11-17 18:45 GMT

கொள்ளிடம்:

ெகாள்ளிடம் அருகே எடமணலில் பொறைவாய்க்கால் கரை உடைந்ததால் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மீண்டும் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த 6 நாட்களுக்கு பிறகு மேடான பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் வயல்களில் மழைநீர் வடிய தொடங்கி வருகிறது.ஆனால் கொள்ளிடம் கிழக்கு பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாமல் உள்ளது. வேட்டங்குடி, இருவக்கொள்ளை, பழையபாளையம், வடகால், கடவாசல், ஆலங்காடு, அகர வட்டாரம், எட மணல் ஆகிய பகுதிகளில் தண்ணீர் வடிந்து வருகிறது. கிராமப்புறங்களில் வீடுகளை சூழ்ந்து இருந்த மழைநீர் வடிய தொடங்கி வருகிறது.

வாய்க்கால் கரை உடைந்தது

வெள்ளநீர் வடிந்ததாலும் சில வீடுகளின் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. வீடுகளில் ஈரத்தன்மை அதிகமாக இருப்பதால் மக்கள் வீடுகளுக்கு செல்லாமல் பாதுகாப்பு முகாமில் தாங்கி உள்ளனர்.கிராமங்களில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் முழுமையாக வடிய இன்னும் 3 நாட்கள் ஆகும்.எடமணலில் உள்ள பொறைவாய்க்கால் கரை நேற்று முன்தினம் திடீரென உடைந்து 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மீண்டும் தண்ணீரில் மூழ்கின.வயல்களில் தேங்கிய மழைநீர் வடிந்து வந்த நிலையில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு மீண்டும் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை வடிநிலைக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம் உத்தரவின் பேரில் பொறைவாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை பொதுப்பணித்துறை ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்தனர்.சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், எடக்குடி வடபாதி, அட்டகுளம், சட்டநாதபுரம், பெருமங்கலம், சூரக்காடு, காத்திருப்பு, கொண்டல், வள்ளுவகுடி, கோவில் புத்தூர், பனங்காட்டங்குடி, அரசூர் ஆகிய பகுதிகளில் விளைநிலங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் சரியான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வடிவதற்கு தாமதம் ஆகி வருகிறது.இதுகுறித்து ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

நிவாரண வழங்க வேண்டும்

ஆலங்காடு, வேட்டங்குடி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை மழைநீர் சூழ்ந்து வடியாமல் உள்ளது. மழைநீர் வடியாததால் 6 நாட்களாக அவதிப்பட்டு வருகிறோம். நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வந்தோம். மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்