எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 20 பேர் காயம்

கே.வி.குப்பம் அருகே நடந்த எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 20 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-02-10 16:39 GMT

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் ஆலத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகல் கிராமத்தில் காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு, எருது விடும் விழா நடைபெற்றது. 200-க்கும் அதிகமான மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அதில் 7 மாடுகள் நிராகரிக்கப்பட்டன. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 175 மாடுகள் வாடி வாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து சென்றன. மாடுகள் முட்டி 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓடிய 4 மாடுகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதல் பரிசாக ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.65 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.55 ஆயிரம் என மொத்தம் 41 பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக துணை கலெக்டர் ஜெ.ராமகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் டி.கலைவாணி, கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்ட வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு விழாவை கண்காணித்தனர். விழா நடத்துவதற்கான குறிப்பிட்ட நேரம் கடந்துவிட்டதால், சுமார் 20 மாடுகள் ஓடாமல் திருப்பி அனுப்ப ப்பட்டன. விழா ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள், விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்