தஞ்சைமாவட்டத்தில் 12 ரவுடிகள் உள்பட 20 பேர் கைது

தஞ்சை மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 12 ரவுடிகள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 1,860 மதுபாட்டில்கள், 680 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-02-02 21:13 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 12 ரவுடிகள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 1,860 மதுபாட்டில்கள், 680 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் அதிரடி வேட்டை

தஞ்சை மாவட்டத்தில் ரவுடிகள் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர். ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்யவும், பொது அமைதியை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.கடந்த 30-ந்தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் இந்த அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. இந்த அதிரடி வேட்டையில் 12 ரவுடிகள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

1,860 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

மேலும் மாவட்டத்தில் உள்ள 302 ரவுடிகளின் வீடுகளிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது 4 அரிவாள்கள், 2 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருட்டுத்தனமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்த 1,860 மதுபான பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.மேலும் கஞ்சா விற்பனை செய்தவரிடமிருந்து 680 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. குற்ற வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாமல் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த 52 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும் ரவுடிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் நடமாட்டங்கள், செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன் அவர்கள் மீதமுள்ள குற்ற வழக்குகள் விரைந்து தண்டனை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்