அடிப்படை வசதிகளுக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்
கீழ்வேளூர் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளுக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சிக்கல்:
கீழ்வேளூர் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளுக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ரூ.20 லட்சம் ஒதுக்கீடு
கீழ்வேளூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ் (தி.மு.க.):- அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் வசதி, குளங்களில் படித்துறை அமைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக செய்துதர வேண்டும்.
கண்ணன் (தி.மு.க.):- ஊராட்சிகளில் குடிதண்ணீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு செய்து தர வசதியாக ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
குடிநீர் தொட்டி
தேன்மொழி (அ.தி.மு.க.):- அகரகடம்பனூர் ஊராட்சி கோவில் கடம்பனூரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் செயல்படுத்தப்படவில்லை. வெற்றி வாய்க்கால் -முடிகொண்டான் இடையே இணைப்பு பால பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன்:- ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து திட்டங்களையும் நிதி நிலை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி, ரெங்கா, பாலையா, பிரவினா, ரேவதி, இல்முன்னிசா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லாரன்ஸ், முத்துக்குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.