திண்டுக்கல்லில் தயாரான 20 கிலோ பித்தளை பூட்டு
ராமநாதபுரம் முனியப்பசாமி கோவிலுக்கு கொண்டு செல்வதற்காக, 20 கிேலா எடை கொண்ட பித்தளை பூட்டு திண்டுக்கல்லில் தயாரானது.
திண்டுக்கல் என்றதும் சட்டென நம் அனைவரின் நினைவுக்கு வருவது இங்கு தயாரிக்கப்படுகிற பூட்டு தான். கள்ளச்சாவி கொண்டு திறக்க முடியாத திண்டுக்கல் பூட்டுகள் மிகவும் பிரபலம். திண்டுக்கல்லில் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டு தயாரிக்கும் தொழில் நடக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியால் நலிவடைந்து விட்டாலும், திண்டுக்கல்லில் தயாராகும் பூட்டுகளுக்கு மவுசு இன்னும் குறையவில்லை. தமிழகத்தில் பல கோவில்களுக்கு, திண்டுக்கல்லில் பூட்டு தயாரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம் லாந்தை பகுதியில் சந்தவழியான் முனியப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கதவில் பொருத்துவதற்கு பூட்டு தயாரிக்க திண்டுக்கல் சந்தைபேட்டையில் உள்ள ஒரு தொழிற்கூடத்தை கோவில் நிர்வாகிகள் தொடர்பு கொண்டனர். இதையடுத்து தொழிலாளர்கள் முருகன், சேகர், சந்தோஷ் 15 நாட்களாக பூட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி 15 அங்குலம் நீளம், 10 அங்குலம் அகலத்தில் 20 கிலோ எடையில் பித்தளை பூட்டு தயாரிக்கப்பட்டது. இந்த பூட்டு, எந்திரத்தை பயன்படுத்தாமல் கை வேலைப்பாடுகளால் தயாரானது குறிப்பிடத்தக்கது. இந்த பூட்டு 10 லீவர்களுடன் கள்ளச்சாவி தயாரிக்க முடியாத வகையில் தயாரிக்கப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும் சாவி 13 அங்குலம் நீளம் உடையது. இதுதவிர கதவில் பொருத்தும் பிரமாண்ட தாழ்ப்பாள்களும் தயாரிக்கப்பட்டன. இவற்றை நேற்று கோவில் நிர்வாகிகள் வந்து வாங்கி சென்றனர்.