20 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

கூடலூர் பகுதியில் பலத்த மழை காரணமாக 20 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கூடலூர்-ஊட்டி சாலையில் கற்கள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-09-11 14:53 GMT

கூடலூர், 

கூடலூர் பகுதியில் பலத்த மழை காரணமாக 20 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கூடலூர்-ஊட்டி சாலையில் கற்கள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளம் புகுந்தது

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவர்சோலை, தேவாலா, பந்தலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் வழக்கத்துக்கு மாறாக கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று கூடலூர் நகர பகுதியில் வெயில் அடித்தது.

ஆனால், சுற்றுவட்டார பகுதியான தேவர்சோலை உள்ளிட்ட வெளிப்புற இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஒற்றவயல், குற்றிமுற்றி, கம்மாத்தி, புத்தூர்வயல், தொரப்பள்ளி வழியாக மாயாற்றுக்கு செல்லும் ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இருவயல், தொரப்பள்ளி ஆகிய இடங்களில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

கற்கள் விழுந்தன

இதனால் இருவயல் ஆதிவாசி மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்தனர். பின்னர் அதிகாலையில் தண்ணீர் வரத்து சற்று குறைந்தது. இருப்பினும், அனைத்து வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, மழைக்காலத்தில் ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க அதிகாரிகள் தொலைநோக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர்.

இதேபோல் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் ஆகாச பாலம் பகுதியில் ராட்சத கற்கள் சாலையில் உருண்டு விழுந்தது. இதனால் கூடலூர்-ஊட்டி இடையே இரவு நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் ராட்சத கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது.

மரம் விழுந்தது

கூடலூர் பகுதியில் பலத்த காற்றும் வீசியதால் ஓவேலி லாரஸ்டன் 4-ம் நெம்பர் பகுதியில் தமிழ்செல்வி என்பவரது வீட்டின் மீது மரம் விழுந்தது. இதில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது. இதனால் சேதமடைந்த வீட்டை சீரமைக்க நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்து உள்ளார். தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்