பட்டுச்சேலை கொள்முதல் செய்து வியாபாரிகளிடம் ரூ.20 கோடி மோசடி

பட்டுச் சேலை கொள்முதல் செய்து ரூ.20 கோடி மோசடி செய்தவர்களிடம் இருந்த பணத்தை மீட்டு தரக் கோரி ஆரணி பட்டுச்சேலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Update: 2023-09-15 18:17 GMT

பட்டுச் சேலை கொள்முதல் செய்து ரூ.20 கோடி மோசடி செய்தவர்களிடம் இருந்த பணத்தை மீட்டு தரக் கோரி ஆரணி பட்டுச்சேலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

ரூ.20 கோடி மோசடி

ஆரணி பட்டுச்சேலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஜெகதீசன், லட்சுமணன், பாஸ்கரன், புண்ணியகோட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா சமயத்தில் வியாபாரம் மந்தமாக உள்ள காலத்தில் திருப்பதியை சேர்ந்த காயத்திரி மற்றும் அவரை சார்ந்தவர்கள் பட்டுச்சேலை மொத்த விலைக்கு வாங்க வந்தார்கள். முதலில் பணம் கொடுத்து எங்களிடம் பட்டுச்சேலை பெற்றுக் கொண்டார்கள்.

பிறகு கடனாக சுமார் ரூ.20 கோடிக்கு எங்களிடம் பட்டுச்சேலையை கொள்முதல் செய்து அதற்குண்டான தொகைக்கு முன்தேதியிட்ட காசோலையை வழங்கியும், கடனாகவும் உற்பத்தியாளர்களிடம் பட்டுச்சேலைகளை பெற்றுக் கொண்டனர்.

நாங்களும் நம்பிக்கையின் பேரில் கொடுத்தோம். அதை தொடர்ந்து 2 வருட காலம் ஆகியும், பணத்தை திருப்பி தரவில்லை. பின்னர் அவர்கள் வீடு தேடி சென்று கேட்டதில் தருகிறேன் என்று கூறி காலம் கடத்திய நிலையில் தலைமறைவாகிவிட்டார்கள். காசோலையும் திரும்ப வந்து விட்டது.

பணத்தை மீட்டு தர வேண்டும்

கடந்த 2 வருடங்களாக தேடியும், அவர்கள் கிடைக்கவில்லை. சமீபத்தில் பட்டுச்சேலை உற்பத்தியாளர் ஒருவர் மூலமாக வேறு ஒரு வழக்கில் 2 நாட்களுக்கு முன்னதாக அவர்கள் கைது செய்யப்பட்டு ஆரணி நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கியுள்ளார்கள்.

எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து நாங்கள் இழந்த பணத்தை அவர்களிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்