புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 20 கேமராக்கள் பொருத்தம்

முதுமலையில் வேட்டை தடுப்பு காவலரை தாக்கிய புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 20 கேமராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர்.

Update: 2022-12-01 18:45 GMT

கூடலூர்

முதுமலையில் வேட்டை தடுப்பு காவலரை தாக்கிய புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 20 கேமராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர்.

வேட்டை தடுப்பு காவலரை தாக்கிய புலி

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு லைட்பாடி பகுதியை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் பொம்மன் (வயது 33). இவர் வனத்தில் நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு நடந்து சென்றபோது புதர் மறைவில் படுத்து கிடந்த புலி திடீரென பாய்ந்து கடித்தது. தொடர்ந்து பொம்மன் புலியிடமிருந்து பாதுகாக்க போராடினர். இருப்பினும் அவரது கைகள், தலை என உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

பின்னர் புலி அங்கிருந்து தப்பி ஓடியது. தொடர்ந்து வன அதிகாரிகள், ஊழியர்கள் பொம்மை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஊட்டி கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேட்டை தடுப்பு காவலர் பொம்மனை கடித்த புலி கடந்த சில தினங்களாக அப்பகுதியில் நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

20 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

மேலும் உடல் மிகவும் மெலிந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் எந்த நேரத்திலும் கிராமத்துக்குள் புலி வரலாம் என்ற அச்சம் ஆதிவாசி மக்களிடையே காணப்பட்டது. இதைத்தொடர்ந்து புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் வித்யா மேற்பார்வையில் வனச்சரகர் மனோஜ்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் லைட்பாடி கிராமத்தில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் 20 இடங்களில் கேமராக்கள் பொருத்தினர்.

தொடர்ந்து கும்கி யானை உதவியுடன் 3 குழுவாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் புலி நடமாட்டம் தென்படவில்லை. இருப்பினும் வனத்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சம்பந்தப்பட்ட புலியின் உடல்நிலை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக மட்டும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்