நிதி நிறுவன அதிபரை கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது
கரூரில் நிதி நிறுவன அதிபரை கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கத்தியால் குத்தி பணம் பறிப்பு
கரூர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சியாம்சுந்தர் (வயது 40). நிதி நிறுவன அதிபர். இவர் நேற்று முன்தினம் இரவு கரூரில் உள்ள கொளந்தாகவுண்டனூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த மகேந்திரன் (35), சுரேஷ் (32) ஆகியோர் சேர்ந்து சியாம்சுந்தரை தாக்கி கத்தியால் அவரது கையில் குத்தினர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்து கொண்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
2 பேர் கைது
இதையடுத்து கத்திக்குத்தில் காயம் அடைந்த சியாம்சுந்தரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சியாம்சுந்தர் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து, மகேந்திரன், சுரேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். நிதிநிறுவன அதிபரை கத்தியால் குத்தி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது