மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்; வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கண்ணனூரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவரது மகன் சதீஷ் (வயது 31). இவரும், இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தியின் மகன் சிவக்குமாரும் (35) மோட்டார் சைக்கிளில் எசனையில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். சதீஷ் மோட்டார் சைக்கிளை ஓட்ட, சிவக்குமார் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். துறையூர்-பெரம்பலூர் சாலையில் களரம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே வந்த பசு மாடு மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சதீஷ், சிவக்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பகுதியில் விபத்தை தடுக்க தற்போது இரும்பு தடுப்பு கம்பிகள் வைக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.