புதுப்பெண் கொலையில் 2 வாலிபர்கள் கைது
கடையம் அருகே புதுப்பெண் கொலையில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடையம்:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகள் இசக்கிலட்சுமி (வயது 23). இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான வெங்கடேசுக்கும் (24) கடந்த 1-ந்தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய நாளே இசக்கிலட்சுமி, அப்பகுதியைச் சேர்ந்த ராம்குமாருடன் (25) மதுரைக்கு சென்று திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து நிச்சயிக்கப்பட்ட நாளில் வெங்கடேசுக்கும், மற்றொரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
இதற்கிடையே இசக்கிலட்சுமி ராம்குமாருடன் சென்னைக்கு சென்றார். அங்கு அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இசக்கிலட்சுமி கணவரை விட்டு பிரிந்து, பூலாங்குளத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூலாங்குளத்தில் இருந்த இசக்கிலட்சுமியை 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று, துப்பாக்குடி காட்டுப்பகுதியில் அவரது கழுத்தை அறுத்துக்கொலை செய்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வெங்கடேசின் தம்பியான ஆனந்த் (22), உறவினரான சிவா (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து இசக்கிலட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான ஆனந்த் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
எனது அண்ணன் வெங்கடேசுக்கும், இசக்கிலட்சுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திருமணத்துக்கு முந்தைய நாளில் இசக்கிலட்சுமி வேறொருவருடன் சென்று திருமணம் செய்ததால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தேன். பின்னர் எனது அண்ணனுக்கும், மற்றொரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணத்துக்கு பின்னரும் இசக்கிலட்சுமி எனது அண்ணனின் செல்போனில் தொடர்பு கொண்டு, அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்தி வந்தார். இதனை அறிந்ததும் மேலும் ஆத்திரமடைந்த நான் உறவினரான சிவாவுடன் சேர்ந்து இசக்கிலட்சுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை அறுத்துக்கொலை செய்தேன்.
இவ்வாறு ஆனந்த் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கைதான ஆனந்த், சிவா ஆகிய 2 பேரையும் போலீசார் அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.