லாரி டியூப்பில் சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது

கல்வராயன்மலையில் லாரி டியூப்பில் சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-02 15:26 GMT

கச்சிராயப்பாளையம், ஜூலை.3-

கல்வராயன்மலையில் லாரி டியூப்பில் சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

விரட்டிப்பிடித்த வனத்துறை

கல்வராயன்மலையில் கிளாக்காடு-ஆத்தூரான்கொட்டாய் சாலையில் கரியாலூர் வனவர் பாலச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அந்த சாலை வழியாக காரில் சாராயம் கடத்தப் படுவதாக வனத்துறையினருக்கு செல்போன் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உஷாரான வனத்துறையினர், ரோந்துப்பணியை தீவிரப்படுத்தினர்.

அந்த சமயத்தில் வேகமாக வந்த காரை நிறுத்துமாறு வனத்துறையினர் சைகை காண்பித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக வனத்துறையினர், தங்களது வாகனத்தில் துரத்திச்சென்றனர். 10 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச்சென்று, அந்த காரை வனத்துறையினர் மடக்கினர்.

2 வாலிபர்கள் கைது

உடனே காரில் இருந்த 2 வாலிபர்கள், தப்பி ஓட முயன்றனர். அவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் காரை சோதனை செய்தனர். அதில், 4 லாரி டியூப்களில் 120 லிட்டர் சாராயம் இருந்தது. விசாரணையில், எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் பிரபு(வயது 28), சடையன் மகன் காமராஜ்(26) ஆகியோர் என்பதும், எருக்கம்பட்டில் இருந்து சாராயம் காய்ச்சி அதை விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கார், சாராயத்துடன் 2 பேரையும் கரியாலூர் போலீஸ் நிலையத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, காமராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கார், 120 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோட்டை விட்ட போலீஸ்... துரத்தி பிடித்த வனத்துறை...

எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலர், காரில் சாராயம் கடத்த தயாராகி வருவதாகவும், அதை தடுத்து நிறுத்துமாறும் கரியாலூர் போலீஸ் நிலையத்திற்கு ஒருவர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வெறும் பெயரளவிற்கு ரோந்து சென்று விட்டு, மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்து விட்டனர். இதையறிந்த அந்த நபர், சாராயம் கடத்துவது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர், துரிதமாக செயல்பட்டு சாராயம் கடத்தியவர்களை துரத்திச்சென்று பிடித்துள்ளனர். சாராயம் கடத்தியவர்களை கைது செய்யாமல் அலட்சியத்தால் போலீசார் கோட்டை விட்டனர். அதே சமயம் சாராயம் கடத்தியவர்களை துரத்துச்சென்று பிடித்த வனத்துறையினருக்கு பாராட்டு குவிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்