மருந்துகளை தவறான முறையில் விற்றால் 2 ஆண்டு சிறை

போதைக்காக பயன்படுத்தும் மருந்து- மாத்திரைகளை தவறான முறையில் விற்பனை செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் மருந்து கட்டுப்பாடு மண்டல அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-08-19 18:07 GMT

நாகர்கோவில், 

போதைக்காக பயன்படுத்தும் மருந்து- மாத்திரைகளை தவறான முறையில் விற்பனை செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் மருந்து கட்டுப்பாடு மண்டல அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழிப்புணர்வு கூட்டம்

மருந்து விற்பனை தொடர்பாக வணிகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மருந்து கட்டுப்பாடு மண்டல அதிகாரிகளுக்கு மாநில மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குனர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

அதன்படி குமரி மாவட்ட மொத்த மற்றும் சில்லரை மருந்து விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு குமரி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் டேவிட் ரவி, பொருளாளர் சதீஷ், மொத்த மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் ராஜன், சில்லரை மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் ராஜலிங்க குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஏராளமான மொத்த, சில்லரை மருந்து வணிகர்கள் கலந்து கொண்டனர்.

சோதிக்க வேண்டும்

கூட்டத்தில் நெல்லை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் ஹபீப் முகமது கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

மொத்த மற்றும் சில்லரை மருந்து வணிகர்கள் முதலில் சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். மருந்துச் சீட்டை ஒருவர் கொண்டு வருகிறார் என்பதற்காக வலி நிவாரணி மற்றும் மயக்க மருந்து- மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது. அந்த மருந்துச் சீட்டை கொண்டுவரக்கூடிய நபர்கள் சரியான நபர்களா? என்பதை சோதித்தறிய வேண்டும்.

2 ஆண்டுகள் சிறை

அந்த மருந்துச்சீட்டு வெளிமாவட்ட டாக்டர்களால் வழங்கப்பட்டு இருந்தால் மருந்துகளை வழங்கக்கூடாது. மருந்துக் கடைகளில் மயக்க மருந்து மற்றும் மாத்திரைகள், வலி நிவாரணி மருந்து மற்றும் மாத்திரைகளை பிற மருந்து- மாத்திரைகளோடு சேர்த்து வைக்காமல் தனியாக வைக்க வேண்டும். மேலும் இந்த மருந்துகளை கடையின் உரிமையாளர் மற்றும் பொறுப்புள்ள கடை ஊழியர் மட்டுமே எடுத்துக் கொடுக்க வேண்டும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளை தவறான முறையில் விற்பனை செய்து, அதை வாங்கிய நபர் போதைக்காக பயன்படுத்திய குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் மருந்துகளை விற்பனை செய்த வணிகர் 2 ஆண்டுகள் வெளிவரமுடியாத சட்டப்பிரிவுகளில் போலீசாரால் கைது செய்யப்படுவது உறுதி.

உரிமம் ரத்து

போதைக்காக மட்டுமே வலி நிவாரணி மற்றும் மயக்க மருந்துகளை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மருந்து வணிகர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு ஹபீப் முகமது கூறினார்.

அவருடன் மருந்து ஆய்வாளர்கள் ஸ்ரீரேகா, அனுரோசினா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்