2 வயது குழந்தை சாவு; தாய் கைது

கோவையில் 2 வயது குழந்தையை பெற்ற தாயே தினந்தோறும் அடித்து சித்ரவதை செய்துள்ளார். அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டது.

Update: 2022-10-27 18:45 GMT

போத்தனூர்

கோவையில் 2 வயது குழந்தையை பெற்ற தாயே தினந்தோறும் அடித்து சித்ரவதை செய்துள்ளார். அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டது.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெண் குழந்தைகள் சித்ரவதை

கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 34). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தில்சாத் பானு (33). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயது மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகளுக்கும் இருந்தன. சிறுவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் முகமது ரபீக்-தில்சாத் பானு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இதேபோல கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தில்சாத் பானு, தனது 2 பெண் குழந்தைகளையும் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்ததாக தெரிகிறது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

உடலில் இருந்த காயங்களால் 2 வயது பெண் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து 2 வயது குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது விளையாடியபோது குழந்தை கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால் குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால், டாக்டர்கள் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வசாரணை நடத்தினர். இதில் தில்சாத் பானு அடித்ததில் தான் குழந்தை காயமடைந்தது தெரியவந்தது.

குழந்தை சாவு

மேலும் இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 2 வயது குழந்தை நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே தனது 2 வயது குழந்தையை கொடூரமாக அடித்து சித்ரவதை செய்ததும், அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்ததும் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்