பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பெண்கள் பலி; 5 பேர் படுகாயம் - பொங்கல் சீர்வரிசை கொண்டு சென்றபோது பரிதாபம்

பொங்கல் சீர்வரிசை கொண்டு சென்றபோது 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் 2 பெண்கள் பலியானார்கள். குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-12 01:01 GMT

குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியபிள்ளை. இவர் மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி உலகம்மாள் (வயது 75). ஏற்கனவே சுப்பிரமணிய பிள்ளை இறந்து விட்டார். இவர்களுக்கு கோலப்பன், நாகராஜன், பாலசுந்தரம்பிள்ளை என 3 மகன்கள் உள்ளனர்.

இதில் பாலசுந்தரம்பிள்ளையின் மகள் உமாவை சுசீந்திரம் அருகே காக்கமூரில் உள்ள கண்ணன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். உமாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இருவரும் மஸ்கட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் உமாவுக்கு தலை பொங்கல் என்பதால் காக்கமூருக்கு சென்று பொங்கல் சீர்வரிசை கொடுக்க உலகம்மாள் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து பாத்திரங்கள், மளிகை சாமான்கள், கிழங்கு உள்ளிட்ட அனைத்து பொருட்களுடன் சொகுசு காரில் நேற்று காலையில் புறப்பட்டனர்.

காரில் உமாவின் தாய் சுபா (55), பாட்டி உலகம்மாள், நாகராஜனின் மனைவி பிரேமா (45), கோலப்பன் மனைவி சுப்புலெட்சுமி (55), உறவினரான அதே பகுதியை சேர்ந்த தளவாய்சுந்தரத்தின் மனைவி உமா (50), சுப்புலெட்சுமியின் பேத்தி சிபிக் ஷா (2) ஆகியோர் இருந்தனர். இந்த காரை அழகியபாண்டியபுரம் இடைகோடை சேர்ந்த ஜெகநாதன் (28) என்பவர் ஓட்டினார்.

பூதப்பாண்டியில் இருந்து புறப்பட்ட கார் நாஞ்சில் புத்தனாறு கால்வாய் சாலை வழியாக தாழக்குடி நோக்கி சென்றது. இந்த பகுதியில் ஒருபக்கம் கால்வாய், மறுபக்கம் 10 அடி பள்ளத்தில் வயல்வெளி உள்ளது. இந்தநிலையில் அந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை கடந்து சென்றபோது திடீரென்று கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 10 அடி பள்ளத்தில் பாய்ந்தது. அதனைத்தொடர்ந்து பலமுறை உருண்டு அங்குள்ள வாழை தோட்டத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் உலகம்மாள், உமா ஆகியோர் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்த மற்ற 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்