ஆசிரியை உள்பட 2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு

பழனியில் ஆசிரியை உள்பட 2 பெண்களிடம் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2022-08-18 17:18 GMT

பழனி திருநகரை சேர்ந்த மாரி மனைவி ஆவுடையம்மாள் (வயது 77). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் வீட்டின் முன் பகுதியை சுத்தம் செய்துவிட்டு குப்பைகளை அந்த பகுதியில் உள்ள தொட்டியில் கொட்டுவதற்கு சென்றார். அப்போது அந்த வழியே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென ஆவுடையம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்...திருடன்...என கூச்சல் போட்டார். ஆனால் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர்கள் ஆவுடையம்மாள் கழுத்தில் இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.

இதேபோல் பழனி கவுண்டன்குளத்தை சேர்ந்த மனோகரன் மனைவி மஞ்சுளா (70) வீட்டு வாசல் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை பறித்துவிட்டு தப்பினர். இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பழனி டவுன் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டு நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பழனி நகரில் பட்டப்பகலில் அடுத்தடுத்து 2 பகுதிகளில் தங்க சங்கிலி பறிப்பு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்