நகராட்சி ஊழியர் உள்பட 2 பெண்களிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

செய்யாறில் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நகராட்சி பெண் ஊழியர் மீது மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் மோதி 7 பவுன் நகையை பறித்து சென்றனர். மற்றொரு பெண்ணிடமும் நகை பறிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2022-09-09 18:36 GMT

செய்யாறு

செய்யாறில் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நகராட்சி பெண் ஊழியர் மீது மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் மோதி 7 பவுன் நகையை பறித்து சென்றனர். மற்றொரு பெண்ணிடமும் நகை பறிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நகராட்சி ஊழியர்

செய்யாறு டவுன் கோபால் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி வைஷ்ணவிப்பிரியா (வயது 28) திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வைஷ்ணவியின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து கொண்டிருந்தபோது 2 நபர்களும் அவர் அணிந்திருந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் திருவோத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மனைவி அம்பிகா தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சோழன் தெரு சந்திப்பில் பின்னால் வந்த மர்ம நபர்கள் அம்பிகாவின் மோட்டார் சைக்கிளில் குறுக்கிட்டு மடக்கி அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்சங்கிலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து இரு வேறு புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். செய்யாறு பகுதியில் தொடர்ந்து மர்ம நபர்கள் தனியாக செல்லும் பெண்களை பின்தொடர்ந்து சென்று நகையினை பறித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். போலீசார் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதோடு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்