பட்டப்பகலில் நகைக்காக 2 பெண்கள் வெட்டிக்கொலை; அரியலூரில் பரபரப்பு

பட்டப்பகலில் 2 பெண்கள் நகைக்காக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-22 23:13 GMT

காளான் பறிக்க சென்றனர்

அரியலூர் மாவட்டம் பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. இவர் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி மலர்விழி (வயது 29). இவர்களுக்கு ஸ்ரீராம் (5) என்ற மகனும், ஸ்ரீமதி (11) என்ற மகளும் உள்ளனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணியின் மனைவி கண்ணகி (40). இவர்களுக்கு விக்னேஷ்வரன் (24) என்ற ஒரு மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை கண்ணகியும், மலர்விழியும் சமையல் செய்வதற்காக அருகில் உள்ள வயலுக்கு காளான் பறிப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த கலைமணி வயல் பகுதிக்கு சென்று தேடியுள்ளார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த அந்த ஊரை சேர்ந்த இளைஞர்களும் வயலுக்கு சென்று தேடிப்பார்த்தனர்.

வெட்டிக்கொலை

அப்போது அங்கு மலர்விழி, கண்ணகி ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இதைக்கண்டு கலைமணி மற்றும் அந்த பெண்களை தேடிய இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து கலைமணி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மலர்விழி, கண்ணகி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, கொலை செய்யப்பட்ட மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் நகைகளை காணவில்லை என்பது தெரியவந்தது.

நகைகளுக்காக...

இதனால் நகைகளுக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு மோப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. பெண்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி வயல்வெளி பகுதியில் ஓடிய மோப்ப நாய் கழுவந்தோண்டி சாலை பகுதியில் சென்று படுத்துக் கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மேலும் அங்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், பெரும்பாலும் காளான் பறிக்க கண்ணகி மட்டுமே வயலுக்கு செல்வது வழக்கம் என்றும், நேற்று முதல்முறையாக அவருடன் மலர்விழியும் சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை

இதையடுத்து 2 பெண்களும் நகைக்காக கொலை செய்யப்பட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி, பெண்களை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

நகைக்காக 2 பெண்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் சோகத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்