திடக்கழிவு மேலாண்மை பணிக்கு ரூ.32 லட்சத்தில் 2 லாரிகள்
திடக்கழிவு மேலாண்மை பணிக்கு ரூ.32 லட்சத்தில் 2 லாரிகளை கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வீடுகள்தோறும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சென்று குப்பைகளை சேகரித்து வண்டிகள் மூலம் அவற்றை திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு கொண்டு சென்று தரம் பிரிக்கின்றனர். இதற்காக மாநகராட்சி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட திடக்கழிவு மேலாண்மை மையம் உள்ளது.
இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தில் ரூ.32 லட்சத்தில் புதிதாக 2 டிப்பர் லாரிகள் வாங்கப்பட்டன. இந்த லாரிகளை பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். மண்டலக்குழு தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான், வெங்கடேசன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கொடியசைத்து 2 லாரிகளையும் தொடங்கி வைத்தார். முன்னதாக லாரிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் சங்கர்கணேஷ், மாநகர நல அலுவலர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.