கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி மற்றும் மண்எண்ணெய் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் முளகுமூடு பகுதியில் நேற்று காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார்.
இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் தங்களது வாகனத்தில் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். அதிகாரிகள் விரட்டி வருவதை கண்டு டிரைவர் கல்லுவிளை பகுதியில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். அதைதொடர்ந்து அதிகாரிகள் காரில் சோதனை செய்தபோது, மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியிலும், காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடி டிரைவர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.