காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குளச்சல் அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-10-13 18:45 GMT

குளச்சல்:

குளச்சல் அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தீவிர சோதனை

ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசி மற்றும் மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி வாகனங்களில் கேரளாவுக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு அவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார், தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் குளச்சல் அருகே உள்ள பனவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.

2 டன் அரிசி பறிமுதல்

உடனே அதிகாரிகள் தங்களது வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது, டிரைவர் காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். அதைதொடர்ந்து அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் சிறு சிறு மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர், அரிசியை உடையார்விளை அரசு கிட்டங்கியிலும், காரை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். முதல் கட்ட விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்