2 ஆயிரம் டன் வெள்ளை கற்கள் பறிமுதல்

சேலம் அருகே கடத்த முயன்ற 2 ஆயிரம் டன் வெள்ளை கற்களை கனிம வளத்துறைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-08-18 20:15 GMT

கருப்பூர்:-

சேலம் அருகே கடத்த முயன்ற 2 ஆயிரம் டன் வெள்ளை கற்களை கனிம வளத்துறைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெள்ளைக்கற்கள்

சேலம் அருகே உள்ள கருப்பூர், வெள்ளக்கல்பட்டி, டால்மியா போர்டு பகுதியில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இங்கு வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் வெள்ளை கற்கள் வெட்டி எடுக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வெள்ளை கற்கள் வெட்டி எடுப்பது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் வெள்ளக்கல்பட்டி, பாம்பன் கரடு, செங்கரடு, செட்டிச்சாவடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வெள்ளை கற்கள் வெட்டி எடுத்து கடத்திச்சென்று விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் வெள்ளை கற்கள் வெட்டி எடுக்க ரூ.500 முதல் ரூ.800 வரை சிலர் கூலி கொடுத்து ஆட்களை அழைத்து வந்து இரவில் வெட்டுகிறார்கள். பின்னர் டிராக்டர்கள் மற்றும் சிறிய லாரிகளை கொண்டு வந்து வெள்ளை கற்களை கடத்தி சென்று விடுகிறார்கள். 1 டன் வெள்ளை கற்கள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

2 ஆயிரம் டன் பறிமுதல்

கடந்த சில நாட்களாக இரவில் வெள்ளக்கல்பட்டி, தாழம்பூ ஓடை மற்றும் அதன் அருகில் உள்ள மலைப்பகுதிகளுக்கு கும்பல் கும்பலாக ஆட்கள் வந்து வெள்ளை கற்களை வெட்டி கடத்தி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த சேலம் கனிம வள உதவி இயக்குனர் பிரசாத் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது மலைப்பகுதிகளில் வெட்டி 2 ஆயிரம் டன் வெள்ளை கற்கள் குவித்து வைத்திருந்தனர். அதனை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கனிம வளத்துறை அதிகாரிகள் கூறும் போது, மலைப்பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் கண்காணித்து வருகிறோம். வெட்டி கடத்துவதற்கு தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெள்ளை கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்