2 குடிநீர் நிறுவனங்களுக்கு தற்காலிக தடை
2 குடிநீர் நிறுவனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் மற்றும் பி.ஐ.எஸ். சான்றிதழ் இல்லாமலும், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இன்றியும் குடிநீர் பாட்டில்கள் விற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமாருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அவருடைய உத்தரவின்பேரில் திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி பகுதியில் உள்ள வாளவந்தான்கோட்டை மற்றும் பழங்கனாங்குடி பகுதியில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, அந்த 2 நிறுவனங்களிலும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் மற்றும் பி.ஐ.எஸ். சான்றிதழ் இல்லாமலும், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இன்றியும் குடிநீர் பாட்டில்கள் உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் விற்பனைக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டு இருந்த 7,500 லிட்டர் குடிநீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த 2 நிறுவனங்களும் தொடர்ந்து குடிநீர் தயாரிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.