2 கோவில்கள், பெட்ரோல் பங்கில் துணிகர கொள்ளை

குளச்சல் அருகே 2 கோவில்கள், பெட்ரோல் பங்கில் துணிகர ெகாள்ளையில் ஈடுபட்டதோடு மர்மஆசாமிகள் தொழிலாளியை கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-06-17 18:45 GMT

குளச்சல்:

குளச்சல் அருகே 2 கோவில்கள், பெட்ரோல் பங்கில் துணிகர ெகாள்ளையில் ஈடுபட்டதோடு மர்மஆசாமிகள் தொழிலாளியை கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவிலில் கொள்ளை

குளச்சல் அருகே வெட்டுமடையில் மேற்கு கடற்கரை சாலையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த வேலாயுதன் (வயது 61) என்பவர் இருந்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலையில் கோவிலுக்கு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கோவிலில் 3 இடங்களில் இருந்த குத்துவிளக்குகளை காணவில்லை.

மேலும், கோவிலை ஒட்டியபடி சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கல்லால் ஆன உண்டியலை உடைக்கும் முயற்சி நடந்ததும் தெரியவந்தது. கோவிலுக்குள் இரவில் புகுந்த மர்மஆசாமிகள் குத்துவிளக்குளை திருடியதோடு உண்டியலை உடைக்க முயன்றதை பூசாரி வேலாயுதன் அறிந்து ஊர் மக்களிடம் தெரிவிக்க புறப்பட்டார்.

தொழிலாளி மீது தாக்குதல்

அப்போது கோவிலின் அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடை முன்பு அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி கணேசன் (55) என்பவர் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனை பார்த்த பூசாரி வேலாயுதன் பதற்றத்துடன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவிலில் மர்மஆசாமிகள் திருடியதை பார்த்து கணேசன் சத்தம் போட முயன்றிருக்கலாம். இதனால் அந்த ஆசாமிகள் கணேசனை கொடூரமாக தாக்கி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

பெட்ரோல் பங்கிலும் கைவரிசை

இதேபோல் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் தெப்பக்குளம் கரையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான விநாயகர் கோவிலிலும் மர்மஆசாமிகள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த சில்வர் குடத்திலான உண்டியலை ஆசாமிகள் அலேக்காக தூக்கி சென்றுள்ளனர்.

மேலும் வெட்டுமடை பெட்ரோல் பங்கில் ஊழியர் ஒருவர் இரவு நேரத்தில் அயர்ந்து தூங்கும் போது அந்த ஊழியரின் செல்போனையும் மர்ம ஆசாமிகள் நைசாக திருடி சென்று விட்டனர். இந்த அனைத்து கொள்ளை சம்பவங்களிலும் ஒரே கும்பல் தான் கைவரிசை காட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

பொதுமக்கள் அச்சம்

இந்த துணிகர கொள்ளை குறித்து தகவல் அறிந்ததும் குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் கொள்ளை நடந்த இடங்களுக்கு தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

இதுதவிர மர்மஆசாமிகளின் உருவம் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தொடர் துணிகர கொள்ளை சம்பவம் குளச்சல், மண்டைக்காடு பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்