மோட்டார் சைக்கிள்கள் மோதல்:2 வாலிபர்கள் பரிதாப சாவு
சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
பட்டதாரி
சுரண்டை அருகே உள்ள ராஜகோபாலபேரி காலனி தெருவை சேர்ந்தவர் முத்தையா மகன் கோபிகிருஷ்ணன் (வயது 26). டிப்ளமோ பட்டதாரி. இவர் கேரளாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரது நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் இளங்கோவன் (23), முருகன் மகன் மாதேஸ்வரன் (18). இந்தநிலையில் விடுமுறைக்கு ஊருக்கு வந்த கோபிகிருஷ்ணன் நேற்று இரவு தனது நண்பர்கள் இருவரையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு சுரண்டையை நோக்கி சென்றுள்ளார்.
வீரகேரளம்புதூர் வடபுறம் ஐ.டி.ஐ. மாணவர் விடுதி அருகில் சென்றபோது அவரது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
2 பேர் பரிதாப சாவு
இந்த விபத்தில் எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த பூலாங்குளம் வேதாள சாமி கோவில் தெருவை சேர்ந்த முத்து மகன் கேசவன் (23) தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த கரும்பனூரை சேர்ந்த பொன் பாண்டி மகன் ராபின் (24) பலத்த காயம் அடைந்தார்.
மேலும் இச்சம்பவத்தில் காயம் அடைந்த கோபி கிருஷ்ணன், இளங்கோவன், மாதேஸ்வரன் ஆகியோரை அந்த நேரத்தில் அங்கு வந்த தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மற்றும் வீரகேரளம்புதூர் போலீசார் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே கோபி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.