போதை மாத்திரைகளுடன் 2 வாலிபர்கள் கைது
போதை மாத்திரைகளுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் திருப்பரங்குன்றம் சாலை முத்துபாலத்திற்கு கீழே சென்ற போது அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த விஷ்ணுராமராஜ் (வயது 23), வில்லாபுரம் வேலுப்பிள்ளை தெரு மாரிச்செல்வம் (23) என்பதும், அவர்கள் போதை மாத்திரையை விற்க முயன்றதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1,890 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.இது குறித்து போலீசார் கூறும் போது, மனநோயாளி உள்ளிட்ட பல்வேறு நோயாளிகளுக்கு தூக்கத்திற்காக கொடுக்கும் மாத்திரை. இதனை அதிகமாக உட்கொண்டால் போதையாக இருக்கும். எனவே இந்த மாத்திரைகளை டாக்டர் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் அந்த மாத்திரைகளை வர்த்தக இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு மாத்திரைகளை ஆர்டர் செய்து ஆன்லைன் மூலம் பெற்றுள்ளனர். மேலும் அதற்கான தொகையை கூகுள்பே மூலம் அனுப்பியுள்ளனர். 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை கூடுதல் விலைக்கு விற்று நல்ல லாபம் பார்த்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் யார், யாருக்கு விற்றார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.