மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 மாணவர்கள் பலி

காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-05-01 18:53 GMT

லாரி மோதியது

காஞ்சீபுரம் மாவட்ட எல்லையில் உள்ள தாமல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் சற்று தொலைவில் ராணிப்பேட்டை மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் உள்ளது. நேற்று இவரது நிலத்தில் நெல் நடவு பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக தன் மகன் ஜீவானந்தத்தை (வயது 17) ஓச்சேரிக்கு சென்று நெல் நாற்றுகளை எடுத்து வர கூறினார்.

அதன்படி ஜீவானந்தம் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள தன் நண்பர்களான கண்ணாகுளத்துமேடு பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரின் மகன் அருண்குமார் (18), பாரதியார் தெருவில் வசிக்கும் கருணாகரன் மகன் சச்சின்குமார் (17) ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு காவேரிப்பாக்கத்தில் இருந்து ஓச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் கொண்டாபுரம் பகுதியில் சென்றபோது அதே பாதையில் தவறான திசையில் எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி இவர்களது மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

2 வாலிபர்கள் பலி

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

மேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சச்சின்குமார், ஜீவானந்தம் ஆகியோர் வாலாஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை டாக்டர்கள் பரிசோதித்தபோது சச்சின்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். ஜீவானந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவர்கள்

இறந்த அருண்குமார் வாலாஜா டோல் கேட்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார். சச்சின் குமார் பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். ஜீவானந்தமும் அவருடன் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதியுள்ளார்.

இதனிடையே விபத்து நடந்தவுடன் டிப்பர் லாரியை டிரைவர் அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

காவேரிப்பாக்கம் பகுதியில் மணல் ஏற்றும் டிப்பர் லாரிகள் அதிவேகமாகவும் விதிமுறைகளை மீறியும் செல்வதால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன. போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு விதி மீறி செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்