கோத்தகிரி பழங்குடியின மாணவர்கள் 2 பேர் தேர்வு
இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் கோத்தகிரி பழங்குடியின மாணவர்கள் 2 பேர் தேர்வாகி உள்ளனர். இதன் மூலம் செயற்கை கோள் தயாரிப்பதை நேரில் பார்வையிட வாய்ப்பு கிடைத்து உள்ளது.
கோத்தகிரி,
இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் கோத்தகிரி பழங்குடியின மாணவர்கள் 2 பேர் தேர்வாகி உள்ளனர். இதன் மூலம் செயற்கை கோள் தயாரிப்பதை நேரில் பார்வையிட வாய்ப்பு கிடைத்து உள்ளது.
2 பேர் தேர்வு
இஸ்ரோ அளிக்கும் விண்வெளி கல்வி திட்டத்தில் இருளர் பழங்குடியின மாணவர்கள் 2 பேர் தேர்வு பெற்று உள்ளனர். 75 வது சுதந்திர தினத்தையொட்டி, 75 செயற்கை கோள்கள் ஏவும் இஸ்ரோவின் திட்டத்தில் தமிழகம் சார்பில் விண்ணிற்கு ஏவப்படும் அகஸ்தியர் செயற்கை கோள் தயாரிப்பு பணிகளை பார்வையிடும் வாய்ப்பும், செயற்கை கோள்கள் பற்றி தெரிந்துக்கொள்ளும் சந்தர்ப்பமும் கோத்தகிரியை சேர்ந்த இருளர் பழங்குடியின மாணவர், மாணவி என 2 பேருக்கு கிடைத்து உள்ளது.
இதுகுறித்து கோத்தகிரி அருகே கரிக்கையூர் அரசு உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் கூறியதாவது:- இந்த பள்ளியில் மொத்தம் 131 பழங்குடியின மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 75-வது சுதந்திர தினத்தையொட்டி, 75 செயற்கை கோள்களை விண்வெளிக்கு ஏவும் இஸ்ரோவின் மெகா திட்டத்தில் தமிழகம் சார்பாக, அகஸ்தியர் பெயரில் செயற்கைக்கோள் ஒன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பங்கு பெற தமிழகத்தில் இருந்து 75 அரசு பள்ளி மாணவர்களை இஸ்ரோ தேர்வு செய்தது.
ஆன்லைன் வகுப்புகள்
அதில் கரிக்கையூர் பழங்குடியின பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் ராஜன் மற்றும் மாணவி ரேவதி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பெங்களூரு இஸ்ரோ மையத்தின் முன்னாள் விஞ்ஞானி சிவதானுபிள்ளை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்து வருகிறார். இந்த மாணவர்கள் செல்போன் சிக்னல் கிடைக்காத வனப்பகுதி கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இதனால் பாடங்களை நானும் படித்து, அவர்கள் பள்ளிக்கு வரும்போது கற்பித்து வருகிறேன். இவர்களுக்கு 8 பிரிவுகளாக ஆன்லைன் வகுப்புகளும், 2 நேர்முக வகுப்புகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து இஸ்ரோவிற்கு சென்று செயற்கை கோள் தயாரிப்பு முறைகள் குறித்து நேரில் பார்வையிடவும், செயற்கை கோள் ஏவப்படும் நாளில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவும் இந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது என்று தெரிவித்தார்.