மகளை வழிமறித்தவர்களை தட்டிக்கேட்ட தந்தைக்கு அரிவாள் வெட்டு 2 மாணவர்கள் கைது

காதல் விவகாரத்தில் மகளை வழிமறித்தவர்களை தட்டிக்கேட்ட தந்தைக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-28 17:14 GMT

கருங்கல், மே:

காதல் விவகாரத்தில் மகளை வழிமறித்தவர்களை தட்டிக்கேட்ட தந்தைக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காதல் விவகாரம்

பாலப்பள்ளம் ஈச்சவிளை காப்புக்காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் வைகுண்ட மணி. இவருடைய மகன் அஜின் (20). தொலையாவட்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் கருங்கல் அருகே மாங்கரை செங்கிட்டான்விளை வட்டக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 56 வயது மதிக்கத்தக்க அரசியல் கட்சி பிரமுகரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதுதொடர்பாக அஜினுக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் பிரச்சினை இருந்துள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று கருங்கல் பகுதியில் வைத்து தன்னுடைய காதலியை அஜின் வழிமறித்து தகராறு செய்துள்ளார். அப்போது அஜினுடன் வெள்ளியாவிளை பகுதியைச் சேர்ந்த ஜோஸ் (23), காக்கவிளையை சேர்ந்த சிஜூ (20) ஆகியோரும் இருந்துள்ளனர்.

தந்தைக்கு வெட்டு

இதனை கண்ட காதலியின் தந்தை அவர்களை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் அவரை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதனால் தலையில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கருங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுதொடர்பாக கருங்கல் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அஜின், ஜோஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். சிஜூவை தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஜோசும் மாணவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்