2 ஊருணியில் சேரும் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்-முதுகுளத்தூர் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
முதுகுளத்தூர்,
2 ஊருணியில் சேரும் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என்று முதுகுளத்தூர் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
2 ஊருணியில்...
முதுகுளத்தூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வான பெருமாள், செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 7-வது வார்டு கவுன்சிலர் மோகன்தாஸ் பேசும் போது, பேரூராட்சியில் மாதந்தோறும் நடத்தப்படும் தீவிர துப்புரவு பணி குறித்து கவுன்சிலருக்கு தகவல் தெரிவிப்பதில்லை. தலைவரும் செயல் அலுவலரும் பார்வையிடுவதில்லை மேலும் சரவணப் பொய்கை, சங்கரபாண்டி ஆகிய இரண்டு ஊருணிகளிலும் கழிவுநீர் பாய்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே 2 ஊருணிகளிலும் பாயும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
நடவடிக்கை
இதற்கு செயல் அலுவலர் மாலதி கூறுகையில், மாதந்தோறும் நடத்தப்படும் தீவிர துப்புரவு பணியை மேற்பார்வையாளர் பார்வையிடுகிறார். மேலும் 2 ஊருணிகளிலும் பாயும் கழிவுநீரை அகற்ற கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து 10-வது வார்டு கவுன்சிலர் சேகர் பேசுகையில் முஸ்தபாபுரம், ஏ.எஸ். மஹால் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் நீண்ட காலமாக தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதற்கு தலைவர் ஷாஜகான் கூறுகையில் கால்வாய் அமைப்பதற்கு போதிய இட வசதி இல்லை. அந்தப்பகுதியில் வசிப்பவர்கள் கால்வாய் அமைக்க இடம் கொடுத்தால் கழிவுநீர் நிரந்தரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
இதேபோல் 11-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி கூறுகையில் எங்கள் பகுதியில் கால்வாய் இல்லாததால் மழை நீருடன் கழிவுநீர் கலந்து வெளியேற முடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது என கூறினார். இதற்கு தலைவர் ஷாஜகான் பேசுகையில், முதுகுளத்தூரில் தேங்கியுள்ள கழிவுநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முடிவில் பேரூராட்சி பணியாளர் ராஜேஷ் நன்றி தெரிவித்தார்.