மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் நோயாளிகளின் உறவினர்கள் 2 பேர் படுகாயம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் நோயாளிகளின் உறவினர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் நோயாளிகளின் உறவினர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மிகவும் பழமை வாய்ந்தது. இந்த மருத்துவமனைக்கு தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் நாள்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இது தவிர உள்நோயாளிகளும் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பதற்காக உறவினர்களும் வருவது உண்டு. ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுடன் ஒருவர் மட்டும் தங்கி இருக்க அனுமதி உள்ளதால் மற்றவர்கள் ஆஸ்பத்திரிக்கு வெளியே தங்குவது வழக்கம்.
நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் போதுமான கட்டிட வசதி இல்லை. தற்போது புதிதாக அங்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் அங்குள்ள பஸ் நிறுத்தும் இடம், மரத்தின் அடியில் தங்கி வருகிறார்கள். இரவு நேரங்களில் அங்கேயே படுத்து தூங்குவதும் உண்டு
பழைய கட்டிடத்தில்...
இந்த ஆஸ்பத்திரியில் தற்போது 300 படுக்கை கட்டிடம், உயர்தர பன்னோக்கு சிகிச்சை மையம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இது தவிர பழைய கட்டிடமும் செயல்பட்டு வருகிறது. இதில் பழைய கட்டிடத்தில் உள்நோயாளிகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பழைய கட்டிடத்தின் முன்பு ஏராளமான நோயாளிகளின் உறவினர் ஆங்காங்கே தங்குவதை காண முடியும். இந்த பழைய கட்டிடத்தில் உள்ள 4-வது வார்டுக்கு செல்லும் நுழைவு வாயிலின் முன்பு இரவு நேரங்களில் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் தங்குவது உண்டு.
சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து 2 பேர் படுகாயம்
நேற்று அதிகாலை இந்த பகுதியில் தஞ்சையை அடுத்த கரந்தையை சேர்ந்த கார்த்திக், பாபநாசத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய இருவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
புனரமைக்க வேண்டும்
இது குறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள பழைய கட்டிடம் ஆங்காங்கே மோசமாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் தூண்களில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் தூண்களில் உள்ள சிமெண்டு பூச்சு பெயர்ந்து உள்ளது.
இந்த கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இங்கு வருவதற்கு நோயாளிகள் மட்டும் அல்ல, அவர்களின் உறவினர்களும் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த கட்டிடத்தை புனரமைக்க வேண்டும் என்றனர்.